Sunday, December 24, 2017

திரிசூல நாதர் திவ்ய தரிசனம்

நான் தினந்தோறும் மின்சார ரயிலில் அலுவலகத்திற்கு பயணம் செய்யும்போது திரிசூலம் ஸ்டேஷன் வரும். அதன்  பெயர் காரணம் என்னவாக இருக்கும் என்று எண்ணியது உண்டு.

என் உறவினர் ஒருவர் அங்குள்ள கோவிலைப் பற்றி சிலாகித்துப் பேசியது மனத்திரையில் வந்து போனது. 

ஒரு இனிமையான காலைப் பொழுதில், வெயில் இல்லா நேரத்தில் தரிசிப்பது என்று எண்ணி பயணம் மேற்கொண்டேன்.

தேசிய நெடுஞ்சாலையில் தாம்பரம் நோக்கி செல்லும் போது, விமான நிலையம் எதிரில், இடது புறம் திரும்பினால் இரயில் இருப்புப்பாதை வரும். அதை கடந்து செல்ல வேண்டும். இருப்புப்பாதை கடக்க  கொஞ்சம் பொறுமை வேண்டும். கிட்டத்தட்ட ஒரு கி.மீ தூரத்தில் உள்ளது கோவில்.

நகர சந்தடி குறைந்து, தார் சாலையில் சென்றால் சுகந்த காற்று முகத்தில் அடிக்கும்.  கிராமத்தில் உள்ளது போல ஒரு சூழல் தோன்றும்.  நான்கு  மலைகள் சூழ்ந்த இடத்தில் இந்த கோவில் உள்ளது.

அதுதான் திரிசூல நாதர் ஆலயம். ஏறக்குறைய 1200 முதல் 1500 ஆண்டுகள் பழமையான கோவில்..




நான்கு மலைகளுக்கு நடுவில் நான்கு வேதங்களுக்கு உட்பொருளாக இறைவன் வீற்றிருக்கிறார்.

வான்வன் சதுர்வேதி மங்கலம் என்றழைக்கப்படும். சதுர் என்றால் நான்கு.

ஆக்கும் கடவுள் பிரம்ம தேவன் தன் படைக்கும் பணி செவ்வனே நடக்க வேண்டி, லிங்க பிரதிஷ்டை செய்து, நான்கு வேதங்களைச் சுற்றிலும்  வைத்து பூஜை செய்தார். அந்த வேதங்களே மலைகளாக மாறியது.

மலைகளின் இடைப்பட்ட பகுதி  "  சுரம்  " என்று அழைக்கப்படும்.

அதன் காரணமாக இவ்வூர் சுரத்தூர் என்றும், திருச்சுரம் என்றும் அழைக்கப்பட்டது. பிரம்ம புரி, திரிசூலம் மற்றைய பெயர்கள்.  முதலாம் குலோத்துங்கன் காலத்தில் திருநீற்று சோழ நல்லூர். 

திரி என்றால் மூன்று. திரிசூலம் முத்தலை தலம். சிவ பெருமானின் கையில் உள்ளது திரிசூலம். இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி இவை மூன்றையும் குறிப்பது திரிசூலம்.     

கிழக்கு நோக்கி அமைந்திருக்கும் கோவில். கொடி மரம். கீழே அழகிய பிள்ளையார். அருகில் நந்தி. அவ்வளவு தான். கடந்து சென்றால் திரிசூல நாதர்.  இடது புறத்தில் செளந்திராம்பிகை.

மூலவர் சன்னதி நுழையும் போது துவார பாலகர்கள் இல்லை. அதற்கு பதிலாக பிள்ளையார், முருகன் சிலைகள். 

கோவில் கஜபிருஷ்ட வடிவமைப்பு. 

 மூலவர் தரிசனம் முடித்து வெளியில் வந்தால் சுவற்றில் வாலி மற்றும் சுக்ரீவன் செதுக்கப்பட்டுள்ளது. அருகே கண்ணப்ப நாயனார் சரிதம்.

அடுத்து வித்தியாசமான கணபதி சிலை.  குடைந்து வடிவமைக்கப்பட்டு உள்ளது.  பாம்பை மாலையாக அணிந்து உள்ளார். நாக யக்ஞோபவித கணபதி என்று பெயர். நாகத்தை பூனூலாக அணிந்து உள்ளவர். 

காளகஸ்திக்கு இணையான ராகு தலம்.

அடுத்து இருப்பவர் தெற்கு நோக்கி அமர்ந்துள்ள வீரான தட்சிணாமூர்த்தி. ஐயப்பன் போல இடது காலை குத்திட்டு அமர்ந்துள்ளார். சீடர்கள் சின்முத்திரை காட்டியபடி அமர்ந்துள்ளனர்.

கோஷ்டத்தின் தென்மேற்கு மூலையில் சீனிவாசப் பெருமாள் சன்னதி. வைகுந்த ஏகாதசி அன்று முத்தங்கி சேவை உண்டு.

காசி விசுவநாதர், முருகன் எதிரில் லிங்கோத்பவர், மார்கண்டேஸ்வரர், முத்துகுமார சாமி, நால்வர் சன்னதிகள் உள்ளன.

காரணகர்த்தா பிரம்மனுக்கு சன்னதி உள்ளது. 

நடராஜர், சண்டிகேஸ்வரர், பைரவர், சந்திரன்,  சூரியன் சிலைகளையும் தரிசனம் செய்யலாம்.

தூண்களில் இறக்கை இல்லா சரபேஸ்வரரை தரிசிக்கலாம்.

அம்பாள் திரிபுர சுந்தரி. தெற்கு நோக்கி உள்ளார். தனி சன்னதி. 

வெளிப்பிரகாரத்தை சுற்றி வந்தால் அரச மரம். அடியில் பிள்ளையார். நாகர். தனியே பெரிய நவக்கிரகங்கள் சன்னதி. ஆஞ்சநேயர், ஐயப்பன், ஆதி சங்கரர் சன்னதிகள். இவையெல்லாம் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.

கோவிலைச் சுற்றி வந்ததும் மனது இலேசானது போன்ற எண்ணம்.

வாய்ப்பு கிடைத்தால் சென்று வாருங்கள்.

No comments:

Post a Comment