Monday, December 25, 2017

பொழிச்சலூர் சிவன் கோவில்

நாளிதழ்களை புரட்டிக் கொண்டு இருந்தேன். சனிப்பெயர்ச்சி பற்றியே,  அதிக நாளிதழ்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

கமலா வேறு எனக்கு ஏழரை நாட்டுச் சனி  ஆரம்பம் என்று திகில் தகவலை  கொடுத்துக் கொண்டே இருந்தார். திருநள்ளாறு போக வாய்ப்பே இல்லை. கூட்டம் சாதாரண நாட்களிலேயே அதிகம். என்ன செய்யலாம் என்று எண்ணிய போது எமது இருப்பிடம் அருகிலேயே உள்ள ஒரு பழமையான கோவில் நினைவில் வந்து சென்றது.

அந்த திருத்தலம் தான் பொழிச்சலூர் சிவன் கோவில்.



பல்லாவரத்தில் இருந்து 4 கி.மீ தொலைவில், பம்மல் அருகில் உள்ள கோவில் இது.

அகஸ்தீஸ்வரர் என்று அழைக்கப்படும் திருக்கோவில்.

வட திருநள்ளாறு என்றும், தொண்டை மண்டல நவக்கிரக கோவில் என்றும் சிறப்பு பெற்ற ஊர் பொழிச்சலூர்.

பொழில் + சேரூர் = பொழிச்சலூர்.

சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோவில். வேளாளர் கலப்பையால் உழுத போது தட்டுப்பட்ட லிங்கம். மூன்றாம் குலோத்துங்க சோழன் காஞ்சி மா நகரத்தைக் கைப்பற்றியதும் , நிறுவிய தலங்களில் இதுவும் ஒன்று. விமான அமைப்பு கஜ பிருஷ்டம். 

 மூன்று நிலை ராஜ கோபுரம். இரண்டு வாசல். கிழக்கு பார்த்து ஒரு வாசல் அமைந்திருந்தாலும், வடக்கு வாசல் வழியே தான்  கோவில் உள்ளே செல்ல இயலும்.

உள்ளே நுழைந்து இடது புறம் திரும்பி முதல் பிரகாரம் வழியாக உள்ளே சென்றால்
அகத்தியர், சூரியன்.
 விநாயகர், வள்ளி, தெய்வானையுடன் முருகப் பெருமான். தரிசித்து உள்ளே சென்றால், ஆஹா என்னே பரவசம். கம்பீரமாக, சுயம்புவாக தோன்றிய ஈசனின் திருமேனி லிங்க வடிவில்.

கைலாசத்தில் இருந்து தெற்கே பொதிகை மலை செல்லும் வழியில், சித்த புருஷர்களில் முதன்மையான அகத்திய மகாமுனி இங்கு தங்கி தரிசனம் மேற்கொண்டதால் அகஸ்தீஸ்வரர் என்றழைக்கப்பட்டது.

 ஈசன் கிழக்கு நோக்கி வீற்றிருக்கிறார். மனிதர்கள் வருடம் முழுவதும் பூஜை செய்வது போல்,  சித்திரை மாதத்தில் 7, 8, 9 நாட்களில் சூரிய ஒளிக்கதிர்கள் ஈசன் மேல் விழுந்து சூரிய பூஜை செய்வது கண் கொள்ளாக் காட்சி.

என்ன ஒரு வடிவமைப்பு. 1000 வருடங்கள் முன்னரே நமது கட்டிடக் கலை வல்லுநர்களின் கைவண்ணம் பாராட்டத்தக்கது.

மகிழ்வுடன் வெளியே வந்தால் அம்பாள் ஆனந்த வல்லி அழகாக அருள் பாலிக்கிறார். தெற்கு நோக்கி வீற்றிருக்கிறார். கடந்ததும்  நவக்கிரக சன்னதி. 

சுற்றி வந்தால் மூர்த்தாவாக சனி பகவான்  தனி சன்னதியில் எழுந்தருளியுள்ளார்.

சனிபகவானே இத்தலத்தில் தன் பாவத்தை போக்க ஈசனை வழிபட்ட தலம்.

சனி பகவான் நள்ளார் தீர்த்தம் உண்டு பண்ணி தம் பாவத்தை போக்கிய தலம். 

நம்மை பிடிக்கும் சனி பகவானால் பாதிப்பு அதிகம் இல்லாமல் இருக்க இத்தலத்திற்கு வந்து வேண்டிக் கொள்ளலாம். 

ஒரு சமயம் சிவ பெருமான், தம்மை சனி பிடித்து விடக் கூடாது என்று எண்ணி, பார்வதி தேவியிடம் தான் நிஷ்டையில் இருக்க போவதாகச் கூறி, ஒரு குகையின் உள்ளே சென்று  மூடிக் கொண்டார். ஏழரை வருடங்கள் கழித்து  வெளியே வந்து பார்த்தால் வாசலில் சனி பகவான். உன் பிடியில் இருந்து தப்பினேன் எனறுரைக்க, சனி பகவானோ, சனிப்பெயர்ச்சி காரணமாகத்தான் நீங்கள் ஏழரை ஆண்டு தேவியை பிரிந்து இருந்தீர்கள் என்று உரைத்தார்.  சனி பகவானின் வலிமையை உணர்ந்தார் ஈசன். உடனே அவர் இன்று முதல் நீவீர் சனீஸ்வரர் என்று அழைக்கப்படுவீர் 
 என  நாமகரணம் இட்டார்.    

சங்கடம் தீர்க்கும் சனிபகவானே...

மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய்.. 

சச்சரவின்றிச் சாகா நெறியில்....

இச்செகம் வாழ இன்னருள் தா தா.....   

என்று சனீஸ்வரனை போற்றிப் பாடியபடி வந்தேன்.

வெளியே வந்தால் அடுத்த சுற்று. தென்கிழக்கு மூலையில் அஞ்சனையின் புத்திரன். கடந்தால் தட்சிணாமூர்த்தி தெற்கு நோக்கி. அருகே பிள்ளையார். தென்மேற்கு மூலையில் அரசமரம். அதற்கு பிறகு கோசாலை. அகத்திக்கீரை அருகில் கிடைக்கிறது. அவற்றைக் கொடுத்து அளவில்லா மகிழ்ச்சி அடையலாம்.   

பின்பு சிவலிங்கம். பிரம்மா, விஷ்ணு, சண்டிகேஸ்வரர், விஷ்ணு துர்க்கை.

பின்னர் காவல் தெய்வமாய், காக்கும் கடவுளாய்,     கால பைரவர் ஆக்ரோஷமாக ஆதிக்கம் பெற்று காணப்படுகிறார்.

கோவில் பிரகாரத்தில் நிறைய நாய்கள் இருக்கின்றன. 

சனி பகவான் பிரசாதம் வெளியே வைக்கும் போது காக்கைகள் கூட்டம் கூட்டமாக கூடுகின்றன.

சென்னையில் இருப்பவர்கள் சிரமம் இன்றி தரிசனம் செய்ய ஏதுவான சனீஸ்வரன் ஆலயம். மற்றும் பழமையான சிவனின் தலமும் கூட.

வழிபட வேண்டுகின்றேன்.

No comments:

Post a Comment