Monday, December 25, 2017

பொழிச்சலூர் சிவன் கோவில்

நாளிதழ்களை புரட்டிக் கொண்டு இருந்தேன். சனிப்பெயர்ச்சி பற்றியே,  அதிக நாளிதழ்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

கமலா வேறு எனக்கு ஏழரை நாட்டுச் சனி  ஆரம்பம் என்று திகில் தகவலை  கொடுத்துக் கொண்டே இருந்தார். திருநள்ளாறு போக வாய்ப்பே இல்லை. கூட்டம் சாதாரண நாட்களிலேயே அதிகம். என்ன செய்யலாம் என்று எண்ணிய போது எமது இருப்பிடம் அருகிலேயே உள்ள ஒரு பழமையான கோவில் நினைவில் வந்து சென்றது.

அந்த திருத்தலம் தான் பொழிச்சலூர் சிவன் கோவில்.



பல்லாவரத்தில் இருந்து 4 கி.மீ தொலைவில், பம்மல் அருகில் உள்ள கோவில் இது.

அகஸ்தீஸ்வரர் என்று அழைக்கப்படும் திருக்கோவில்.

வட திருநள்ளாறு என்றும், தொண்டை மண்டல நவக்கிரக கோவில் என்றும் சிறப்பு பெற்ற ஊர் பொழிச்சலூர்.

பொழில் + சேரூர் = பொழிச்சலூர்.

சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோவில். வேளாளர் கலப்பையால் உழுத போது தட்டுப்பட்ட லிங்கம். மூன்றாம் குலோத்துங்க சோழன் காஞ்சி மா நகரத்தைக் கைப்பற்றியதும் , நிறுவிய தலங்களில் இதுவும் ஒன்று. விமான அமைப்பு கஜ பிருஷ்டம். 

 மூன்று நிலை ராஜ கோபுரம். இரண்டு வாசல். கிழக்கு பார்த்து ஒரு வாசல் அமைந்திருந்தாலும், வடக்கு வாசல் வழியே தான்  கோவில் உள்ளே செல்ல இயலும்.

உள்ளே நுழைந்து இடது புறம் திரும்பி முதல் பிரகாரம் வழியாக உள்ளே சென்றால்
அகத்தியர், சூரியன்.
 விநாயகர், வள்ளி, தெய்வானையுடன் முருகப் பெருமான். தரிசித்து உள்ளே சென்றால், ஆஹா என்னே பரவசம். கம்பீரமாக, சுயம்புவாக தோன்றிய ஈசனின் திருமேனி லிங்க வடிவில்.

கைலாசத்தில் இருந்து தெற்கே பொதிகை மலை செல்லும் வழியில், சித்த புருஷர்களில் முதன்மையான அகத்திய மகாமுனி இங்கு தங்கி தரிசனம் மேற்கொண்டதால் அகஸ்தீஸ்வரர் என்றழைக்கப்பட்டது.

 ஈசன் கிழக்கு நோக்கி வீற்றிருக்கிறார். மனிதர்கள் வருடம் முழுவதும் பூஜை செய்வது போல்,  சித்திரை மாதத்தில் 7, 8, 9 நாட்களில் சூரிய ஒளிக்கதிர்கள் ஈசன் மேல் விழுந்து சூரிய பூஜை செய்வது கண் கொள்ளாக் காட்சி.

என்ன ஒரு வடிவமைப்பு. 1000 வருடங்கள் முன்னரே நமது கட்டிடக் கலை வல்லுநர்களின் கைவண்ணம் பாராட்டத்தக்கது.

மகிழ்வுடன் வெளியே வந்தால் அம்பாள் ஆனந்த வல்லி அழகாக அருள் பாலிக்கிறார். தெற்கு நோக்கி வீற்றிருக்கிறார். கடந்ததும்  நவக்கிரக சன்னதி. 

சுற்றி வந்தால் மூர்த்தாவாக சனி பகவான்  தனி சன்னதியில் எழுந்தருளியுள்ளார்.

சனிபகவானே இத்தலத்தில் தன் பாவத்தை போக்க ஈசனை வழிபட்ட தலம்.

சனி பகவான் நள்ளார் தீர்த்தம் உண்டு பண்ணி தம் பாவத்தை போக்கிய தலம். 

நம்மை பிடிக்கும் சனி பகவானால் பாதிப்பு அதிகம் இல்லாமல் இருக்க இத்தலத்திற்கு வந்து வேண்டிக் கொள்ளலாம். 

ஒரு சமயம் சிவ பெருமான், தம்மை சனி பிடித்து விடக் கூடாது என்று எண்ணி, பார்வதி தேவியிடம் தான் நிஷ்டையில் இருக்க போவதாகச் கூறி, ஒரு குகையின் உள்ளே சென்று  மூடிக் கொண்டார். ஏழரை வருடங்கள் கழித்து  வெளியே வந்து பார்த்தால் வாசலில் சனி பகவான். உன் பிடியில் இருந்து தப்பினேன் எனறுரைக்க, சனி பகவானோ, சனிப்பெயர்ச்சி காரணமாகத்தான் நீங்கள் ஏழரை ஆண்டு தேவியை பிரிந்து இருந்தீர்கள் என்று உரைத்தார்.  சனி பகவானின் வலிமையை உணர்ந்தார் ஈசன். உடனே அவர் இன்று முதல் நீவீர் சனீஸ்வரர் என்று அழைக்கப்படுவீர் 
 என  நாமகரணம் இட்டார்.    

சங்கடம் தீர்க்கும் சனிபகவானே...

மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய்.. 

சச்சரவின்றிச் சாகா நெறியில்....

இச்செகம் வாழ இன்னருள் தா தா.....   

என்று சனீஸ்வரனை போற்றிப் பாடியபடி வந்தேன்.

வெளியே வந்தால் அடுத்த சுற்று. தென்கிழக்கு மூலையில் அஞ்சனையின் புத்திரன். கடந்தால் தட்சிணாமூர்த்தி தெற்கு நோக்கி. அருகே பிள்ளையார். தென்மேற்கு மூலையில் அரசமரம். அதற்கு பிறகு கோசாலை. அகத்திக்கீரை அருகில் கிடைக்கிறது. அவற்றைக் கொடுத்து அளவில்லா மகிழ்ச்சி அடையலாம்.   

பின்பு சிவலிங்கம். பிரம்மா, விஷ்ணு, சண்டிகேஸ்வரர், விஷ்ணு துர்க்கை.

பின்னர் காவல் தெய்வமாய், காக்கும் கடவுளாய்,     கால பைரவர் ஆக்ரோஷமாக ஆதிக்கம் பெற்று காணப்படுகிறார்.

கோவில் பிரகாரத்தில் நிறைய நாய்கள் இருக்கின்றன. 

சனி பகவான் பிரசாதம் வெளியே வைக்கும் போது காக்கைகள் கூட்டம் கூட்டமாக கூடுகின்றன.

சென்னையில் இருப்பவர்கள் சிரமம் இன்றி தரிசனம் செய்ய ஏதுவான சனீஸ்வரன் ஆலயம். மற்றும் பழமையான சிவனின் தலமும் கூட.

வழிபட வேண்டுகின்றேன்.

Sunday, December 24, 2017

திரிசூல நாதர் திவ்ய தரிசனம்

நான் தினந்தோறும் மின்சார ரயிலில் அலுவலகத்திற்கு பயணம் செய்யும்போது திரிசூலம் ஸ்டேஷன் வரும். அதன்  பெயர் காரணம் என்னவாக இருக்கும் என்று எண்ணியது உண்டு.

என் உறவினர் ஒருவர் அங்குள்ள கோவிலைப் பற்றி சிலாகித்துப் பேசியது மனத்திரையில் வந்து போனது. 

ஒரு இனிமையான காலைப் பொழுதில், வெயில் இல்லா நேரத்தில் தரிசிப்பது என்று எண்ணி பயணம் மேற்கொண்டேன்.

தேசிய நெடுஞ்சாலையில் தாம்பரம் நோக்கி செல்லும் போது, விமான நிலையம் எதிரில், இடது புறம் திரும்பினால் இரயில் இருப்புப்பாதை வரும். அதை கடந்து செல்ல வேண்டும். இருப்புப்பாதை கடக்க  கொஞ்சம் பொறுமை வேண்டும். கிட்டத்தட்ட ஒரு கி.மீ தூரத்தில் உள்ளது கோவில்.

நகர சந்தடி குறைந்து, தார் சாலையில் சென்றால் சுகந்த காற்று முகத்தில் அடிக்கும்.  கிராமத்தில் உள்ளது போல ஒரு சூழல் தோன்றும்.  நான்கு  மலைகள் சூழ்ந்த இடத்தில் இந்த கோவில் உள்ளது.

அதுதான் திரிசூல நாதர் ஆலயம். ஏறக்குறைய 1200 முதல் 1500 ஆண்டுகள் பழமையான கோவில்..




நான்கு மலைகளுக்கு நடுவில் நான்கு வேதங்களுக்கு உட்பொருளாக இறைவன் வீற்றிருக்கிறார்.

வான்வன் சதுர்வேதி மங்கலம் என்றழைக்கப்படும். சதுர் என்றால் நான்கு.

ஆக்கும் கடவுள் பிரம்ம தேவன் தன் படைக்கும் பணி செவ்வனே நடக்க வேண்டி, லிங்க பிரதிஷ்டை செய்து, நான்கு வேதங்களைச் சுற்றிலும்  வைத்து பூஜை செய்தார். அந்த வேதங்களே மலைகளாக மாறியது.

மலைகளின் இடைப்பட்ட பகுதி  "  சுரம்  " என்று அழைக்கப்படும்.

அதன் காரணமாக இவ்வூர் சுரத்தூர் என்றும், திருச்சுரம் என்றும் அழைக்கப்பட்டது. பிரம்ம புரி, திரிசூலம் மற்றைய பெயர்கள்.  முதலாம் குலோத்துங்கன் காலத்தில் திருநீற்று சோழ நல்லூர். 

திரி என்றால் மூன்று. திரிசூலம் முத்தலை தலம். சிவ பெருமானின் கையில் உள்ளது திரிசூலம். இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி இவை மூன்றையும் குறிப்பது திரிசூலம்.     

கிழக்கு நோக்கி அமைந்திருக்கும் கோவில். கொடி மரம். கீழே அழகிய பிள்ளையார். அருகில் நந்தி. அவ்வளவு தான். கடந்து சென்றால் திரிசூல நாதர்.  இடது புறத்தில் செளந்திராம்பிகை.

மூலவர் சன்னதி நுழையும் போது துவார பாலகர்கள் இல்லை. அதற்கு பதிலாக பிள்ளையார், முருகன் சிலைகள். 

கோவில் கஜபிருஷ்ட வடிவமைப்பு. 

 மூலவர் தரிசனம் முடித்து வெளியில் வந்தால் சுவற்றில் வாலி மற்றும் சுக்ரீவன் செதுக்கப்பட்டுள்ளது. அருகே கண்ணப்ப நாயனார் சரிதம்.

அடுத்து வித்தியாசமான கணபதி சிலை.  குடைந்து வடிவமைக்கப்பட்டு உள்ளது.  பாம்பை மாலையாக அணிந்து உள்ளார். நாக யக்ஞோபவித கணபதி என்று பெயர். நாகத்தை பூனூலாக அணிந்து உள்ளவர். 

காளகஸ்திக்கு இணையான ராகு தலம்.

அடுத்து இருப்பவர் தெற்கு நோக்கி அமர்ந்துள்ள வீரான தட்சிணாமூர்த்தி. ஐயப்பன் போல இடது காலை குத்திட்டு அமர்ந்துள்ளார். சீடர்கள் சின்முத்திரை காட்டியபடி அமர்ந்துள்ளனர்.

கோஷ்டத்தின் தென்மேற்கு மூலையில் சீனிவாசப் பெருமாள் சன்னதி. வைகுந்த ஏகாதசி அன்று முத்தங்கி சேவை உண்டு.

காசி விசுவநாதர், முருகன் எதிரில் லிங்கோத்பவர், மார்கண்டேஸ்வரர், முத்துகுமார சாமி, நால்வர் சன்னதிகள் உள்ளன.

காரணகர்த்தா பிரம்மனுக்கு சன்னதி உள்ளது. 

நடராஜர், சண்டிகேஸ்வரர், பைரவர், சந்திரன்,  சூரியன் சிலைகளையும் தரிசனம் செய்யலாம்.

தூண்களில் இறக்கை இல்லா சரபேஸ்வரரை தரிசிக்கலாம்.

அம்பாள் திரிபுர சுந்தரி. தெற்கு நோக்கி உள்ளார். தனி சன்னதி. 

வெளிப்பிரகாரத்தை சுற்றி வந்தால் அரச மரம். அடியில் பிள்ளையார். நாகர். தனியே பெரிய நவக்கிரகங்கள் சன்னதி. ஆஞ்சநேயர், ஐயப்பன், ஆதி சங்கரர் சன்னதிகள். இவையெல்லாம் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.

கோவிலைச் சுற்றி வந்ததும் மனது இலேசானது போன்ற எண்ணம்.

வாய்ப்பு கிடைத்தால் சென்று வாருங்கள்.

வழுவூர்

மயிலாடுதுறையில் இருந்து திருமீயச்சூர் கோவிலுக்கு  ஞாயிறு தோறும் செல்லும் வாய்ப்பு எனக்கு முன்னர் கிடைத்தது.

மயிலாடுதுறையிலிருந்து 
 4 கி.மீ கடந்ததும் வலது பக்கம் ஒரு போர்டு கண்ணில் தென்படும். ஒரு கோவில் பற்றிய தகவல். 

சரி சென்று பார்க்கலாம் என்று சென்றோம். அந்த ஊர் தான் வழுவூர்.



நட்டுவாங்கனார் வழுவூர் ராமையா பிள்ளை அவர்களின் ஊர்.

சிறிய கிராமம். அழகான கோவில். அது தான் அட்ட வீரட்டேஸ்வரர்.  அட்டம் என்றால் எட்டு. சிவ பெருமானின் வீரமான எட்டு கோவில்களில் வழுவூர் வீரட்டேஸ்வரரும் ஒருவர்.  

வழுவூர் கோவிலுள் நுழையும் முன் குளம் உள்ளது. அது பஞ்ச பிரம்ம தீர்த்தம்  என்றழைக்கப்படும்.

கடந்து சென்றால் இரண்டாவது  கோபுரம். அதில் சுயம்பு மூர்த்தியாக நாகாபரண அலங்காரத்தில்   கீர்த்தி வாசனாய் சிவ பெருமான்.

 செருக்கு மிகுந்த      தருகாவனத்து முனிவர்கள் வேள்வியில் ஈடுபட்டனர்.  அதிலிருந்து தோன்றிய யானையை இறைவன் மேல் ஏவி விட சிவ பெருமான் யானையின் வயிற்றில் புகுந்தார்.  

உலகமே இருள்  சூழ்ந்தது. உமையவள் அச்சத்துடன் குழந்தை முருகனை இடுப்பில் வைத்துக் கொண்டு இருக்கும் போது பெருமான் யானையின் வயிற்றை கிழித்துக் கொண்டு வெளியே வருவார். முருகப்பெருமான் தன் தந்தையை ஆள்காட்டி விரலால் சுட்டிக் காட்டுவார். யானையை சம்ஹாரம் செய்ததால்  அவர் கஜ 
சம்ஹார மூர்த்தி. 

சுவாமியின் உள்ளங் கால்களை காணலாம். இவை அனைத்தும் சிற்பங்களாக மண்டபத்தில் காணலாம்.

சுவாமிகளின் திருவடியை யானையின் தலையில் வைத்து உள்ளதையும் பார்க்கலாம்.

வெளிப்பிரகாரத்தில் யந்திர பிரதிக்ஷ உள்ளது. 

அம்பாள் இளங்கிளை நாயகி.

அமாவாசை தினம் சிறப்பு வாய்ந்தது.

மற்றைய வீரட்டேஸ்வர தலங்கள் 

திருக்கண்டீயூர், திருக்கோவிலூர், திருவேதிகை
திருப்பறியலூர், 
 திருவிற்குடி
திருக்கொற்கை
திருக்கடையூர்.

திருக்கோவிலூர் மற்றும் திருவேதிகை இரண்டும் விழுப்புரம் அருகில் உள்ளது.

மற்றைய ஆறு தலங்கள் மயிலாடுதுறை அருகில் உள்ளது.

திரியும் முப்புரம் தீப்பிழம்பு ஆகச்  செங்கண் மால்விடை மேல் திகழ்வானை........

காண அட்ட வீரட்டேஸ்வரர் தலங்கள் செல்வோமா....... 

திருமீயச்சூர்

பேரளத்திலிருந்து 2 கி.மீ. திருமீயச்சூர். பழமையான கோவில்.



உள்ளே நுழைந்ததும் துவதஸ்தம்பம். கீழே பிள்ளையார். நந்தி. கடந்து சென்றால் அருள்மிகு மேகநாத சுவாமிகள்.

திங்கள் தங்கிய சடை உடையானை..

தேவ தேவனை, செழுங்கடல் வளரும்.

சங்க வெண்குழைக் காது உடையானை....

சிவ பெருமானை தரிசிக்கலாம்.

சுவாமி மீது சித்திரை மாதத்தில் 7 நாட்கள் சூரியனின் கதிர்கள் படும்.

சுவாமி தரிசனம் முடிந்து வெளியே வந்தால் ஷேத்ர புராணேஷ்வர் சிற்பம். அம்பாளை இடம் இருந்து பார்த்தால் சிரித்த படியும், வலமிருந்து பார்த்தால் கோபமாகவும் தெரியும். கோபம் அடைந்த அம்பாளை ஈசன் சமாதானப் படுத்துவதை பார்க்கலாம்.  அற்புத சிற்பம். வாழ்க்கை தத்துவம் கூட.

நவக்கிரக சன்னதி கிடையாது. 9 நாகர் சிலைகளே நவக்கிரகங்கள்.

தென்மேற்கு மூலையில் இருந்து பார்த்தால் பிரம்மா  விஷ்ணு, சிவன் மூன்று தெய்வங்களை ஒன்றாக தரிசனம் செய்யலாம்.

முடிந்து தெற்கு பிரகாரம் வழியே வந்தால் ஆஹா..

மற்றொரு சிவன் சன்னதி.
சகல புவனேஸ்வரர். அம்பாள் மின்னும் மேகலையாள். கோவினுள் மற்றொரு கோவில். இளங்கோவில் என்பர்.

அருகிலே  துர்க்கை கையில் கிளியுடன். பக்தர்கள் தங்களின் கோரிக்கையை கூற கிளி தூது செல்வதாக நம்பிக்கை. கிளிகள் நிரம்ப இருக்கின்றன. அவைகள் பறந்து செல்வதை பார்க்கும் போது பக்தர்கள் தங்களின் வேண்டுதல் சுவாமியிடம் செல்வதாக மகிழ்ச்சியடைகின்றனர்.

 பார்வதி பரமேஸ்வரனை கஜ வாகன ரூபராய் வைத்து பூஜித்ததால் கஜ பிருஷ்ட விமானம்.

பிரகாரத்தை விட்டு வெளியே வந்தால் தெற்கு நோக்கி தனி சன்னதியில் கொள்ளை அழகோடு வீற்றிருக்கிறாள் அன்னை லலிதாம்பிகை. கம்பீரமான தோற்றத்துடன் அபய ஹஸ்தம். வலது காலை இடது பக்கத்தில் மடித்து கம்பீரமாக அமர்ந்து இருப்பார். பஞ்சாசன பீடத்தில் ஸ்ரீ மேருவின் மேல் அமர்ந்து ஸ்ரீ மணோன்மனி ரூபமாக.

அம்பாளின் முகத்திலிருந்து தோன்றிய வாக்தேவதைகள்  மூலம் ஸ்ரீ லலிதா சகஸ்ர நாமம் உலகில் தோன்றிய ஸ்தலம். ஸ்ரீ ஹயக்ரீவரால் ஸ்ரீ அகத்தியருக்கு உபதேசிக்கப்பட்ட இடம்.

சர்வ அலங்கார பூஷிதையாக வளையல்கள், கொலுசு, ஒட்டியாணம்,  ஆபரணங்களும் அணிந்து காட்சி அளிக்கிறார். 

விஜய தசமியன்று திருப்பாவாடை மஹா நைவேத்தியம் .  சர்க்கரை பொங்கல் நடுவில் நெய் குளத்தில் அம்பிகையை தரிசிக்கலாம்.

மதியம் 12 மணிக்கு பிரண்டை சாதம் பிரசாதம்.
நோய்கள் தீரும் என்று நம்பிக்கை.

 சென்று வழிபடலாமா..

திருப்பெருந்துறை என்னும் ஆவுடையார் கோவில்

காலை 7 மணிக்கு திருச்சியிலிருந்து கிளம்பி சென்றோம்.. 100 கி.மீ தொலைவு.

முன்னை வினையிரண்டும் வேரறுத்து முன்னின்றான் பின்னை பிறப்பறுக்கும் பேராளன் - தென்ன பெருந்துறையின் .......

திருப்பெருந்துறை என்னும்   ஆவுடையார் கோவில்..



மாணிக்கவாசகர் கட்டிய கோவில். அதிமர்த்தன பாண்டிய மன்னரின் அமைச்சர். குதிரை வாங்க வந்து அந்த பணத்தில் ஈசனுக்கு கோவில் கட்டினார். பின்னர் இறைவன் நரியை பரியாக்கி பரியை நரியாக்கி, பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்டு திருவிளையாடல் புரிந்தார்.

கோவில் சிறப்பு சிற்பக் கலை தான். 

உருவம் இல்லாமல் அருவ வழிபாடு.

சன்னிதானத்தில் ஓரு கல் இருக்கும். அதில் புழுங்கல் அரிசி சாதத்தை நைவேத்தியம் செய்வார்கள்.  ஆவி பறக்க.  கீரை, பாகற்காய் கூட.   தேன்குழல் அதிரசம் ஆகியவையும் உண்டு. 11 மணிக்கு. அது முடிந்ததும் விற்பனை செய்கிறார்கள். குறைந்த விலை. நிறைந்த சுவை.

ஆர்க்கிடெக்சர் அதிசயம்.

குரங்கு உடும்பு வழிபாடு 
கொடுங்கை
1000 கால்கள் இரண்டு தூண்களில்
ஆறு யானைகளை தூக்கிச் செல்லும் பறவைகள்.
கற்சங்கிலிகள்
பல நாட்டு குதிரை 
பச்சிலை ஓவியங்கள் 
நடன முத்திரைகள்.

இன்னும் பல....

அம்பாள் திருவடி மட்டும் தான்..

கற்பூர ஆரத்தி வெளியே காட்ட மாட்டார்கள்.

குருந்த மரம் தல விருட்சம்.

மாணிக்கவாசகர் சிலை உள்ளே இருக்கின்றது. அவருக்கு சிறப்பு வழிபாடு. அவருக்கே முதல் மரியாதை. 

நவக்கிரகங்கள் தூண்களில் இருக்கும்.

27 நட்சத்திரங்கள்  உருவங்களாக இருக்கும்.
என்னிலா சிற்பங்கள். 

கோவில் சிறப்பு கூற வழிகாட்டிகள் இருக்கின்றனர்..

புதுக்கோட்டையில்  இருந்து அறந்தாங்கி. அங்கிருந்து 10 -15 கி.மீ.

பார்க்க வேண்டிய 
அதிசயக் கோவில் 
ஆவுடையார் கோவில்....